for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

பத்திரிக்கைச் செய்தி

தலித் மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடுமையைச் செய்த குற்றவாளிகளைக் கைது செய்ய

அரசியல் கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை

அன்புடையீர்,

வணக்கம்,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட  இறையூர் கிராமம் அருகே  உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி  வந்த குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதியினர்  மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  கடந்த 2022 டிசம்பர் 25 அன்று அக்கிராம மக்களுக்கு அடுத்தடுத்து திடீர் உடல்நலக் குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டதைத் தொடர்ந்து  சிகிச்சை அளித்த மருத்துவர்கள்   குடிநீரில்தான் பிரச்னை என்று கூறியவுடன்  கிராமத்தைச் சேர்ந்த சிலர், அவர்கள் பயன்படுத்திவந்த 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்த போது மலம் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து 27.12.2022 அன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை உள்ளதையும், கோவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அடுத்து கோட்டாட்சியர் குழந்தைசாமி பாதிக்கப்பட்ட மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சம்பவம் நடந்து சுமார் 15 நாட்கள் கடந்த நிலையில் இது வரை குற்றவாளிகள் கைது செயயப்படாமல் இருப்பது ஏன்? மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில பெண்கள் உரிமை ஆணையம் போன்றவை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன்? அரசு சாரா அமைப்புகள் தான் இது பற்றி பேசி வருகின்றன. 21 ஆம் நூற்றாண்டிலும் சாதிய வன்மத்துடன் தொடரும் இக்கொடூரத்தை அரசியல் கட்சிகள் உடனடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இத்துடன் குற்றவாளிகள் கைது செய்யப்படவும், கிராமத்தில் அமைதியான சூழல் நிலவவும்  அரசியல் கட்சிகள் அரசுக்கு அழுத்தம்  கொடுக்க வேண்டுகிறோம். இச்சம்பவம் குறித்து ஒரு நீதிபதி தலைமையில் இரண்டு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்துவது பாராட்டிற்குரியது ஆகும்.

இப்படிக்கு

ஹென்றி திபேன்

நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

Full Media Report



Join us for our cause