for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

"மனித உரிமைகளைப் பறிக்கிறது இந்தியாவின் குண்டர் சட்டம்!" திருமுருகன் காந்தி விவகாரத்தில் ஐ.நா. அறிக்கை

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின்போது உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்காக, சென்னை மெரினாவில் கடந்த வருடம், மே 17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல் நடத்தப்பட்டபோது, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அருண்குமார், டைசன், இளமாறன் ஆகியோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீஸாரின் இந்த நடவடிக்கையைப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளின் நிர்வாகிகளும் கடுமையாகக் கண்டித்தனர். இந்த நிலையில் இந்த அநீதியை மதுரை 'மக்கள் கண்காணிப்பக' செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேன் ஐ.நா.-வின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இந்தப் புகாரை ஐ.நா. நிபுணர் குழு விசாரித்து, தற்போது அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. விசாரணை மற்றும் அதன் அறிக்கை பற்றி ஹென்றி டிஃபேனிடம் பேசினோம். ''இலங்கை இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 17-ம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டத்தை, மே 17 உள்ளிட்ட சில அமைப்புகள் நடத்தி வந்தன. கடந்த வருடம் நடைபெற்ற நிகழ்வின்போது, மே 17 அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து, நாங்கள் ஐ.நா. குழுவிடம், 2017 ஜூலை மாதம் புகார் அளித்தோம். 

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் நடந்த 80வது ஐ.நா. கூட்டத்தொடரில் திருமுருகன் காந்தி கைதுதொடர்பாக நாங்கள் அளித்த புகாரின்பேரில், ஐ.நா. நிபுணர் குழு தனது கருத்தினை பதிவு செய்து அக்குழுவின் கருத்துகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தக் கைது சம்பவத்தின் மீதான புகார் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் கருத்துகளைக் கேட்டபோதிலும், எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும், திருமுருகன் காந்தியின் கைது மற்றும் சிறையிலடைப்பு, சர்வதேச மனித உரிமை பிரகடனம், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையிலுள்ள உரிமைகளை மீறுவதாகவும், மனித உரிமை காப்பாளர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதால் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 

குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் யாரை வேண்டுமானாலும் விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்க காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் திருமுருகன் காந்தி மற்றும் மூவரை விடுதலை செய்தபோதிலும், அவர்கள் நான்கு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவித்ததன் மூலம் அவர்களின் உரிமை மற்றும் சுதந்திரங்கள் பறிபோய் உள்ளன என்றும், சித்ரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கைப்படி, அரசாங்கங்களின் கடமைகளை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஐ.நா. குழு கூறியுள்ளது. மேலும் இக்குழு, திருமுருகன் காந்திக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதா என்றும், இச்சம்பவத்தின்போது நடைபெற்ற உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடைபெற்றதா என்பது பற்றியும் பதிலளிக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முதலில் அனுமதி வழங்கிய போலீஸார், பின்னர் அந்த அனுமதியை ரத்துசெய்து, அமைதியாகக் கூடியவர்களைக் கைது செய்தனர் என்றும் தெரிவித்திருந்தோம்.

தமிழகத்தில் 2015-ம் ஆண்டு முதல் 1,250 பேர் குண்டர் தடுப்புச் சட்டம் உள்பட மற்ற தடுப்புக்காவல் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இக்குழு கூறியுள்ளது. இச்சம்பவம் குறித்த புகாரை ஐ.நா.-வின் மனித உரிமைக் காப்பாளர்களுக்கான சிறப்புப் பிரதிநிதி, சித்ரவதைக்கான சிறப்புப் பிரதிநிதி, கருத்துரிமைக்கான சிறப்புப் பிரதிநிதி, அமைதியான வழியில் ஒன்றுகூடும் உரிமைக்கான சிறப்புப் பிரதிநிதி ஆகியோருக்குப் பரிந்துரைத்துள்ளது. ஐ.நா. குழுவின் இந்த அறிக்கையை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்கிறது. மேலும், இக்குழுவின் கருத்துப்படி, திருமுருகன்காந்திக்கு உரிய நஷ்டஈடும், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும் நடத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம். 

ஐ.நா.-வின் மேற்கூறிய நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று, காவல்துறை கண்காணிப்பாளர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மனித உரிமைக் காப்பாளர்களை குண்டர் சட்டத்தில் முறையற்ற வகையில் கைது செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றுகோரி, தமிழக அரசு நடத்தும் காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்றார்

 




Join us for our cause