for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சாத்தான்குளம் சம்பவத்தை போன்று தேனி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் மற்றொரு சித்திரவதை சம்பவம் நடைபெற்றுள்ளது இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையரிடம் நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன் என்று மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் பேட்டி. தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி கிராமம், சூசையப்பர் கிராமத்தில் குடியிருந்து வரும் செல்வம் என்பவரின் மகன் ரிசாத் ராஜ் என்பவரை கடந்த 3.4.2022ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுப்பிரமணி, அமர்நாத் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபரை ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கூட்டிச் சென்று கடந்த 5.4.2022ஆம் தேதி வரை ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் சாதியின் பெயரால் துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ரிசாத் ராஜ் தந்தை செல்வத்துடன் மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன், மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி ஜெயச்சந்திரனை மதுரையில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்தித்து மனு கொடுத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற ஒரு பெண், தன்னுடைய கணவருக்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகார் நிலுவையில் உள்ளது. அந்தப் புகார் கொடுத்ததன் காரணமாக, மங்கையர்க்கரசியின் கணவர் மற்றும் மகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 2017ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை ஏழெட்டு வழக்குகள் வெவ்வேறு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் எதிரியும் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றிய வெங்கடேஷ் பிரபுவின் உறவினர் ராஜசேகர் தற்போது தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். பொறுப்பேற்றதும், இன்று வாய்தா உள்ளது என்று தெரிந்தும் மங்கையர்க்கரசின் மகனை காவல்நிலைய விசாரணைக்கு கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அழைத்துச் செல்கிறார். இந்த விசாரணையில் சொல்ல முடியாத அளவிற்கு மங்கையர்க்கரசியின் மகன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஏப்ரல் 5-ஆம் இரவு வரை துன்புறுத்தப்பட்டு அன்றிரவு 11 மணிக்கு நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்துகின்ற சமயம், மங்கையர்க்கரசி தரப்பு வழக்கறிஞர் வாதத்தின் அடிப்படையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரே நாள் சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அப்படியே சாத்தான்குளம் சம்பவம் அங்கே மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது. காவலர்கள் அடித்த அடியில் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் போக, சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வருகிறது. அந்த அளவிற்கு மிகக் கொடூரமாக ரிசாத் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக தென்மண்டல காவல் துறைத் தலைவரின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்றோம். இதன் தொடர்ச்சியாக அவரும் நடவடிக்கை எடுத்திருப்பார் என நம்புகிறேன். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனுதாரர் வீட்டிற்குச் சென்று சமரசம் பேசியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 24 மணி நேரத்திற்குள் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளோம். அதேபோன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அக்குறிப்பிட்ட காவல்நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளையும் கேட்டுள்ளோம். அதேபோன்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விபரங்களையும் வழங்குமாறு கோரியுள்ளோம். இந்த வழக்கில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருந்தால் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை ஜாமீனில் வெளியே விடப்பட்டால், சாட்சியங்களுக்கான சட்டத்தின் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கை சரியான முறையில் காவல்துறையினர் நடத்தி மாநில மாநில உரிமைகள் ஆணையத்தை மதிப்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மனு கொடுக்க வருகின்ற நாளன்றே மதுரை சமயநல்லூர் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், இதைவிட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்..? சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். எங்களிடமுள்ள உரிய ஆதாரங்களை நீதிபதியிடம் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். அவர்களிடமுள்ள ஆவணங்களை உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை' என்றார்.

Join us for our cause