சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் உயர்நிலையில் குடிநீர் தேக்க தொட்டியில் மலத்தை கலந்து சாதி வெறி கொடுமையைச் செய்த குற்றவாளிகளை 15 நாட்களாகியும் கைது செய்யதது ஏன் என்று மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன் கேள்வி எழுப்பி உள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மலம் கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரிடம் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதாகவும், இரட்டை குவளை முறை தொடர்வதாகவும் தலித் மக்கள் புகாரளித்தனர். இது தொடர்பாக சாமியாடிய பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஹென்றி திபேன் கோரிக்கை
இந்த நிலையில் இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்ரி திபேன் அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமம் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
.........................................