for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

“என் பெயர் கோகிலா” என்று விசும்பலும் அழுகையுமாகத் தன் வாக்குமூலத்தை அவள் தொடங்கினாள்.

25 வயதைத் தாண்டாத அந்த இளம்பெண்ணின் கதை நெஞ்சை உருக்கியது.

“என் கணவர் பெயர் சரவணக்குமார் கால்நடை மருத்துவ மனையில் வேலை பார்த்து வந்தார். கந்துவட்டி அரக்கனின் வலைக்குள் என் கணவர் வீழும் வரை காதலித்துக் கைப்பிடித்த கணவன், அழகான ஒரு மகள் என்று எங்கள் வாழ்க்கை இனிமையாகவே இருந்தது.

ஆறுமாதங்களுக்கு முன்பிருந்து அவரின் போக்கில் ஒரு மாற்றம் தெரிந்தது. தொலைபேசி அழைப்பு வரும் போதெல்லாம் அவரிடம் ஒருவித பதற்றமும் அச்சமும் தொற்றிக் கொள்ளும். சில அழைப்புக்கள் வரும் பொழுது பதற்றமும் அச்சமும் நீடிப்பதோடு அதற்குப் பின் நீண்ட நேரம் எவரோடும் எதுவும் பேசாமல் மெளனமாகி விடுவார். மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பென்று நினைக்கிறேன். திடீரென்று ஒரு நாள் என்னிடம்” உன் போனைக் கொடு… கொஞ்சம் பேசிட்டு தரேன்” என்றார். ஏன், ஒங்க போன் என்னாச்சு என்று நான் கேட்டேன்.

தொலைஞ்சு போச்சுன்னு பதில் சொன்னார். என்னங்க 15ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கன போன் தொலைஞ்சு போச்சுன்னு அசால்ட்டா சொல்றீங்கன்னு நான் புலம்பியதை அவர் கண்டு கொள்ளவில்லை. தினமும் என் புலம்பல் தொடர என் வாயை அடக்க அவர் கை நீண்டது. காதலித்துக் கைப்பிடித்தவளை அடிக்கும் நிலைக்கு அவரை தள்ளியது கந்துவட்டிக் கொடுமை… என்ன நினைத்தாரோ தெரியவில்லை சில நாட்கள் கழித்து ஒரு நாள் “வாங்குனே கடனுக்கு வட்டி கட்ட முடியல, கடன்காரன் போனை பிடுங்கிட்டுப் போயிட்டான் ” என்று உண்மையைச் சொன்னார். அன்றைக்குத் தெரியவில்லை, இந்த கந்துவட்டி அவரது உயிரைக் குடிக்கப் போகிறதென்று.

பிறகு ஒருநாள் அவரது புதிய ‘ஆக்டிவா’ இருசக்கர வாகனம் தொலைஞ்சு போச்சுன்னார். நான் நம்பலை பொய் சொல்றீங்க அதை யார் கிட்ட கொடுத்திருக்கீங்க, சொல்லுங்க, போலீஸ் கிட்ட போவோம்னு நான் தொணதொணக்கும் போதெல்லாம் எனக்கு அடிதான் கிடைத்தது. சில நாட்களுக்குப் பிறகு அவர் புலம்பத் தொடங்கிவிட்டார்… “கந்துவட்டிக்காரங்ககிட்ட வாங்கன கடனுக்கு அசலுக்கு மேல வட்டிக்கு கொடுத்தாச்சு அப்படியும் விட… மாட்டேங்கிறாங்க… அசிங்க அசிங்கமா திட்டறாங்க, வீட்டுக்கு வந்து கேவலப்படுத்துவோங்கிறாங்க மிரட்டறாங்க சாகறதத் தவிர வேற வழியில்ல” என்று அவர் புலம்பும்போது அந்த புலம்பல்கள் தற்கொலையில் போய் முடியும்னு நான் கனவுல கூட நினைக்கல.

அக்டோபர் மாதம் 10ம் தேதி அவர் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த பிறகுதான் எனக்கு நிலைமையின் விபரீதம் புரிந்தது. அதைவிட கொடுமை, நான் கொடுத்த புகார் மீது காவல்துறை காட்டிய அலட்சியம். என் கணவரை தற்கொலைக்குத் தூண்டிய கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் அவரது போன் மற்றும் ஆக்டிவா வாகனத்தை மீட்டுத்தர வேண்டும் என்று நான் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… காவல்துறையினரை அணுகும் போதெல்லாம் ‘ஏம்மா எங்களுக்கு உன் கேஸ் மட்டுந்தானா உயிரை வாங்காதே என்று எரிந்து விழுவார்கள்…”

-கடந்த டிசம்பர் 10 அன்று திருநெல்வேலி கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கம் ஏற்பாடு செய்திருந்த பொது விசாரணையின் போது வாக்குமூலம் கொடுத்துவிட்டு அழுத கோகிலாவை அங்கிருந்த எவராலும் தேற்ற முடியவில்லை.

கந்துவட்டியின் அகோரப்பசி
அக்டோபர் மாதம் நெல்லை கந்துவட்டிக் கும்பல் களப் பலி கொடுக்கும் மாதம் போலும். கந்துவட்டியின் அகோரப் பசிக்கு சரவணகுமார் உயிர் போதவில்லை. அது அக்டோபர் 23ஆம் தேதி இசக்கிமுத்துவின் குடும்பத்தையும் விழுங்கிவிட்டது.

தென்காசி காசிதர்மத்தை சார்ந்த இசக்கிமுத்து, தன்னை விடாது மிரட்டிய கந்துவட்டி கும்பல் குறித்து நான்கு முறை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார். ஆனால் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கள்ளத் தூக்கத்தில் ஆழ்ந்து போயின. மனமுடைந்து போன இசக்கிமுத்து ஏழைகளுக்கு பாதுகாப்பற்ற இச்சமூகத்தில் பிறந்ததைத் தவிர வேறெந்த தவறும் செய்யாத தன்னிரு பச்சிளம் குழந்தைகளோடு தன் குடும்பத்தைத் தீக்கிரையாக்கிக் கொண்டார். இக்கொடிய முடிவு நோக்கி இசக்கிமுத்துவை உந்தித்தள்ளியதில் கந்துவட்டி கொடூரம் முதற்காரணியாக இருக்கலாம். ஆனால் கந்துவட்டிக்காரர்களோடு கள்ள உறவு வைத்துள்ள காவல்துறைக்கும் இசக்கிமுத்து பிரச்சனையில் கவலையின்றி உறங்கிப்போன மாவட்ட நிர்வாகத்திற்கும் அக்கோர சம்பவத்தில் பெரும் பங்குள்ளது.

இந்நிகழ்வு மாநில மற்றும் தேசிய ஊடகங்களின் செய்தியாக, கந்துவட்டியின் கொடூரம் மாநிலம் முழுதும் பேசும் பொருளானது. கந்துவட்டி கொடூரம் காவு கேட்பது இசக்கிமுத்துவிடமிருந்து தொடங்கவுமில்லை; முடிந்துவிடவுமில்லை. ஏழ்மையையும் இயலாமையையும் பயன்படுத்திக் கொண்டு சக மனிதனை ஒட்டச் சுரண்டும் இக்கொடுமைக்கு ஆளானோர் பட்டியல் சரவணகுமார், நெல்லை டவுண் கோமதி, மதுரை பெருங்குடி உஷா, ஆண்டிப்பட்டி சரசுவதி, அவர் மகன் ஜெகதீசன், கோவை இருகூர் பூபதி, கோவை சவுரிப்பாளையம் குருராஜன், ஈரோடு மணி என்று நீள்கிறது.

காத்திருக்கும் புதைகுழி
நுண்கடன் வணிகம் என்பது முதலாளித்துவம் கண்டறிந்த பணப்பரிமாற்ற நடைமுறைகளில் ஒன்று. ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் கடனுதவி செய்வது என்ற பரந்த நோக்கத்தில் தொடங்கிய இவ்வணிகம் நாளடைவில் ஒரு சிலர் கைகளில் ஈவு இரக்கமின்றி சுரண்டும் கருவியாக மாறிப் போயிற்று. நுண்கடன் பெறுவோரில் பெரும்பாலானோர் சமூகத்தின் கடைநிலையில் உள்ளவர்களாகவும் பரம ஏழைகளாகவும் சிறு விவசாயிகளாகவும் உள்ளனர். உடனடி பணத்தேவை, வங்கி உள்ளிட்ட வேறெங்கும் கடன்பெற முடியாத சூழல், காலதாமதமின்றி கடன் கிடைக்கும் வசதி, காதும் காதும் வைத்தாற்போல் கடன் கிடைக்கும் ஏற்பாடு போன்றவை கந்துவட்டியை நோக்கி இப்பகுதியினரைத் தள்ளுகின்றன… வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்காக மற்றொரு கடன் வாங்க வேண்டிய அவலம் அவர்களை புதைகுழியில் ஆழ்த்துகிறது.

கந்துவட்டி ஒழிப்புக் கூட்டியக்கம்
இப்படிப்பட்ட புதை சேற்றில் சிக்கிக் கொண்டவர்கள்தான் இசக்கிமுத்துவும் கோமதியும் உஷாவும் மற்றவர்களும். ஆற்றாது அவர்கள் அழுத கண்ணீர் கண்டு அதிகாரம் கலங்காதிருக்கலாம்; சுரண்டும் கந்துவட்டிக் கூட்டம் கவலைப்படாமலிருக்கலாம். ஆனால் இந்த சமூகம் கண் மூடி மெளனியாக இருந்து விட முடியாது. இதுவும் கடந்து போகும் என்று இந்த சமூகம் இருந்து விடக் கூடாது என்ற அக்கறையில் உருவானதுதான் திருநெல்வேலி கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கம்.

இசக்கிமுத்து குடும்பம் தீக்கிரையான அடுத்த நாளே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்துவட்டியை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அக் 25ல் சிபிஐ(எம்) தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, அக். 27ல் 14 கட்சிகள் ஒன்றிணைந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தின. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்போராட்டத்தின் தாக்கம் உடனே தெரிந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 149 கந்துவட்டி வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் சிபிஎம் முன்முயற்சியால் நடைபெற்ற இயக்கங்களைத் தொடர்ந்து ஒரே மாதத்தில் 159 வழக்குகள் பதிவாகி உள்ளன. அது மட்டுமல்ல, சிபிஎம்மின் இந்த முன்முயற்சியே பல அரசியல் கட்சிகள் சமூக அமைப்புக்கள் இணைந்து உருவாக்கிய கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கத்திற்கான தொடக்கப்புள்ளியானது. எனவேதான் அக்.28ல் உருவான கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக சிபிஎம் நெல்லை மாவட்ட செயலர் கே.ஜி.பாஸ்கரன் செயல்பட வேண்டுமென்று அனைத்து அமைப்பினரும் விரும்பினர்.

எளிதாக இருக்கவில்லை பொது விசாரணை
கந்துவட்டி குறித்து ஒரு பொது விசாரணை நடத்த வேண்டுமென்று முடிவெடுக்கும் போதே, பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டுவதும் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதும் அவற்றை ஆவணப்படுத்துவதும் அவ்வளவு எளிதான பணியல்ல என்பதை கூட்டியக்கம் புரிந்திருந்தது. இந்நோக்கத்தோடு மாவட்டம் முழுவதும் 3 நாள் கலைப் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. கூட்டியக்கச் செயல்பாட்டாளர்கள் அரும்பாடுபட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 62 குடும்பங்களை நேரில் சந்தித்து வாக்குமூலங்களைத் திரட்டினர். அத்தோழர்களின் கடுமையான உழைப்பின் காரணமாகவே பாதிக்கப்பட்டவர்களில் பலர் பொது விசாரணையில் பங்கேற்றனர்.

சுரண்டல் கருவியாகும் சுயஉதவிக் குழுக்கள்
கோமதி தன் கணவனைத் தொலைத்தது போல எண்ணற்ற பெண்கள் கந்துவட்டிக் கொடூரத்திற்குத் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் அவலம் மற்றும் கந்துவட்டி அரக்கர்கள் கையாளும் குரூரத் தந்திரங்கள் உள்ளிட்ட பலவும் பொது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தன.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கோமதி அம்மாள் ஏழை, எளிய பெண்களை ஒட்டச் சுரண்டும் கந்துவட்டி பேர்வழி. அற்புதமேரி என்ற பெண்ணுக்கு 40000 ரூபாயை கடனாகக் கொடுத்துவிட்டு அவளிடமிருந்து 2,30,000 ரூபாய் பெற்ற பின்னும் மேலும் 100000 தர வேண்டும் என்று மிரட்டுகிறது. கந்துவட்டிப் பிசாசு.

அற்புதமேரி மட்டுமல்ல, கோமதி அம்மாள் என்ற கந்துவட்டிக்காரப் பேர்வழியின் கோரப்பசிக்கு இரையாகிப் போன தங்கமாரி, லூர்தம்மாள், சுமதி, பூதத்தம்மாள், வசந்தி, வெள்ளையம்மாள், மாரியம்மாள், கலைச்செல்வி, திரேசாள் உட்பட பல பெண்கள் பொது விசாரணையில் வாக்குமூலம் தந்தனர். எங்களை போல அல்லலுறும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வெளியே வர அஞ்சுகிறார்கள் என்று அவர்கள் சொன்னது பிரச்சனையின் ஆழத்தையும் கொடூரத்தையும் புரிய வைக்கிறது. கழுத்தறுக்கும் கந்துவட்டி சங்கிலியில் கோமதி அம்மாள் ஒரு கண்ணிதான். ஆங்காங்கே பல கண்ணிகள் கோரப் பற்களோடு பதுங்கியுள்ளன.

ஒரு குடும்பத்தின் உடனடி பணத் தேவையைப் பயன்படுத்தி முதலில் கடன் கொடுப்பது; நாள் வட்டி, வாரவட்டி, மாதவட்டி, மீட்டர்வட்டி, கந்துவட்டி என்று நிலைமைக்கு ஏற்ப ஓர் அநியாய வட்டியை வசூலிப்பது; பின்னர் வட்டி கட்டத் திணறுகிறபோது அப்பெண்ணை ஒரு சுய உதவி குழுவில் (இதற்காக கிராமம் விடியல் குழு, ஈசா குழு, அணுகோண்டா குழு, ஆசிர்வாதம் குழு, மகாசேமம் குழு என்று பல குழுக்களை பயன்படுத்துகிறார்கள்) சேர்த்து அந்தப் பெண்ணின் பெயரில் கடன் வாங்கி அதனை வட்டிக்கென்று பிடுங்கிக்கொள்வது.

மீண்டும் அந்தப் பெண்ணை இன்னொரு குழுவில் சேர்த்து மீண்டும் கடன் வாங்க வைத்து அப்பணத்தையும் தனக்கு வரவேண்டிய வட்டிக்கென எடுத்துக் கொள்வது இப்படி ஒரு குழு இரண்டு குழு அல்ல… பல குழுக்களில் இணைத்து கொள்ளை அடிப்பது; தன்னிடம் மாட்டும் இரைகளை தன் பிடிக்குள் இறுக்கமாக வைத்துக்கொள்ள அவர்களிடமிருந்து வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவது; வீடு நிலம் என்று ஏதேனும் ஒரு பத்திரத்தைக் கைப்பற்றுவது – இவையெல்லாம் இப்போது நடைமுறையிலுள்ள கந்துவட்டித் தந்திரங்கள்.

உதவாத சட்டம் இருந்தென்ன லாபம்?
கந்துவட்டியைத் தடை செய்ய சட்டமேதும் இல்லையா என்ற அப்பாவித்தனமான கேள்வி எழலாம். இருக்கிறது கந்துவட்டியை ஏட்டளவில் தடை செய்யும் தமிழ்நாடு கந்துவட்டித் தடுப்புச் சட்டம் Tamil nadu Prohibition of Exorbitant Interest Act(2003) என்ற சட்டம் இருக்கிறது. 2003லிருந்து 2014 வரையிலான பத்தாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட 1531 வழக்குகளில் 20 வழக்குகளில்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 388 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

257 வழக்குகள் தொடக்க நிலையிலேயே தள்ளுபடியாகிவிட்டன. 144 வழக்குகளை காவல்துறையே கைகழுவிவிட்டது. 297 வழக்குகளில் துப்புத்துலக்குவது முடிந்தபாடில்லை. குற்றப்பத்திரிக்கைத் தாக்கலான நிலையில் 97 வழக்குகள் உள்ளன. எஞ்சியுள்ள 331 வழக்குகளின் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளன. அரசே தந்துள்ள இந்த புள்ளி விவரங்கள் அதிகார வர்க்கத்தின் துணையோடு கந்துவட்டி தர்பார் எவ்வித தடையுமின்றி ஓகோவென்று நடைபெறுவதைப் பறைசாற்றுகின்றன.

மக்கள் இயக்கமாக மாறட்டும்
இப்பொது விசாரணையின் நடுவர்களாக மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜி. கோல்சே பாட்டில், ம.சு. பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே.வசந்திதேவி உள்ளிட்ட சான்றோர்கள் செயல்பட்டார்கள்.

பொது விசாரணை நடைபெற்ற அன்று மட்டுமே 20க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. 75க்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குமூலங்களை நேரில் பதிவு செய்தனர்.நவம்பர் மாதம் கலெக்டரிடம் 4 முறை நேரில் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என்று சீதபற்பநல்லூர் இந்திராணி சொன்ன செய்தி கேட்டு பொது விசாரணை அரங்கமே உறைந்து போனது. இசக்கிமுத்து மரணத்திற்குப் பின்னும் திருந்தாமல் உள்ள அரசு எந்திரம் தானாகத் திருந்தாது; திருத்தப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்த்தியது. பொது விசாரணையின் முடிவில் நடுவர் மன்றம் “அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல் கந்துவட்டிக் கும்பலுக்குச் சாதகமாக செயல்படுவது வேதனை அளிக்கிறது;

நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய இருவர் மீதும் சட்ட ரீதியான மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வற்புறுத்துகிறது;
தமிழ்நாடு உயர்வட்டி தடுப்புச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில் உரிய திருத்தம் கொண்டுவர தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது; பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் பெற தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கத்தை அறிவுறுத்துகிறது” ஆகியவை உள்ளிட்ட பல பரிந்துரைகளை செய்தது.

காலை 10.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை நடைபெற்ற பொது விசாரணை, ஒன்றை அழுத்தமாகச் சொன்னது; மக்களுக்கான இந்த இயக்கம் வெற்றி பெற இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான சக்திகளை, அமைப்புகளை ஒருங்கிணைப்பதும் மக்கள் இயக்கமாக இதனை மாற்றுவதற்கான துவக்கப்புள்ளியாகும்.





Join us for our cause