for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

பத்திரிக்கைச் செய்தி

 

ஸ்ரீபெரும்புதூரில் முதல் காவல் கொலை!

தூத்துக்குடியில் இரண்டாவது காவல் கொலை!

 

தமிழக காவல்துறைக்கு சுடுவதற்கு கற்றுக் கொடுக்கவேண்டுமா? தூத்துக்குடியில் சரியாக மக்களை சுட்டவர்களுக்கு, காவல்துறை எப்படி சுடவேண்டும் என கற்றுக்கொடுக்க வேண்டுமா? இடுப்பிற்குக் கீழே சுடவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாதா? இதுதான் DGP திரு. சைலேந்திரபாபு, தூத்துக்குடி மாவட்ட SP திரு. ஜெயக்குமார் அவர்களின் திறமையா? வெட்கமாக இருக்கிறது...

தமிழகத்தில் ஒரு புலியைப் பிடிப்பதற்கு 20 நாட்கள் எடுத்து அந்தப் புலியை உயிருடன் பிடிக்க தரமுள்ள தமிழக அரசு, தமிழக வனத்துறை அதிகாரிகள், தமிழக காவல்துறை அதிகாரிகள், ஸ்ரீபெரும்புதூரிலும், தூத்துக்குடியிலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களை சுட்டுக் கொன்ற தொடர் இரண்டு சம்பவங்கள் நடந்திருப்பது, தமிழக காவல்துறைத் இயக்குநரும், காவல்துறைக்குப் பொறுப்பாக இருக்கின்ற தமிழக முதல்வர் அவர்களும் கவலைப்படவேண்டிய, அவமானப்படவேண்டிய ஒரு சம்பவமாக மக்கள் கண்காணிப்பகம் கருதுகிறது. இந்தக் கருத்தைக் கூறுபவர்கள், தி.மு.க அரசை எதிர்ப்பவர்கள் அல்ல; தி.மு.க அரசை எப்பொழுதும் வாழ்த்தியவர்கள்; ஆனால் தவறு செய்யும் பொழுது, மற்றவர்கள் அமைதியாக இருக்கக்கூடிய நேரத்தில், அந்த அமைதியைக் கலைத்து  உண்மையைப் பேச வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்கிறோம்.

சுட்டுக் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியில் ஒரு நல்லவர் என்று நாங்கள் கூறவில்லை. அவர் தவறு செய்யக்கூடிய நபர்; எப்பொழுதும் அந்த நபருக்கு எதிராக வழக்குகள் உள்ளது என்பதெல்லாம் இருக்கக்கூடிய உண்மைதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இது தூத்துக்குடி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் தொடர் என்கவுன்டர் நடப்பதற்கு காரணமாக நிகழும் என்ற சரித்திரம் தமிழத்தில் உண்டு. இன்று கொல்லப்பட்டவர், நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவராக இருக்கிறார். நாளை நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவரை கொலை செய்துவிட்டோம் என்ற காரணத்திற்காக, சமூகங்களில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக, நீங்கள் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களையும், தலித் சமுதாயத்தைச் சார்ந்த குற்றவாளிகளையும், ஒன்றுக்குப் பின் ஒன்றாக சுட்டுக் கொலை செய்வீர்கள் என்று, சரித்திரம் கூறுகிறது. சரித்திர முன்னுதாரங்களும் உண்டு. தயவுசெய்து, ஒரு மனித உரிமை அமைப்பு கூறுவதை கேளுங்கள்; காவல்துறைக்குப் பொறுப்பாக இருக்கக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாகத் தலையீடு செய்து, னுழுஞ திரு. சைலேந்திரபாபு அவர்களை, இதைக் கட்டுப்படுத்துவதற்கு முன்வர, நீங்கள் அவரைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய அவசியம் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகியவற்றில் நடந்தேறிய இரண்டு வழக்குகளையும் மாண்புமிகு மனித உரிமை ஆணையம் உடனடியாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து, முறையாக விசாரணை செய்து, இதற்கு குற்றவாளிகளாக இருக்கக்கூடிய, கீழ் மட்டக் காவல்துறை அதிகாரிகளான IG, DIG, SP அந்தஸ்தில் இருக்கக்கூடியவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கேட்டுக் கொள்கிறது. இந்த தவறான கலாச்சாரத்தை இன்று குற்றவாளிகளுக்கு எதிராக பயன்படுத்துவீர்கள். நாளை உங்களுக்கு வசதியாக இருந்தால், அரசியல் எதிரிகளுக்கு எதிராக இதனைப் பயன்படுத்த நீங்கள் அஞ்சமாட்டீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். தயவுசெய்து இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். இது உங்களுக்கு சரியான, ஏதுவான கலாச்சாரம் கிடையாது. எங்கேயும் இதுபோன்ற சட்டதிற்குப் புறம்பான பாதைகளை தேடிச் செல்கின்ற அரசியல் கட்சிகளுக்கு, நீண்ட கால அரசியல் இருந்தது கிடையாது என்பதனை பணிவுடனும் மரியாதையுடனும் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்த வழக்கில் தூத்துக்குடியின் பாராளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சென்று, காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து, இதன்பின் இருக்கக்கூடிய உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று, பணிவுடனும் மரியாதையுடனும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன். அந்த மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு தமிழ்நாட்டு அமைச்சர்களும் இதற்குப் பொறுப்பேற்று, மனசாட்சிக்கு ஏற்ப செயல்பட உங்களுக்கு கடமை உள்ளது என்று நியாபகப்படுத்த உள்ளோம். இன்று நாடார் சமுதாயம், நாளை தேவர் சமுதாயம், அதற்குப் பின்பு தலித் சமுதாயம் என்று திட்டமிட்டு நீங்கள் கொண்டுச் செல்வீர்கள். இந்த தவறான போக்கை சரி செய்கின்ற, சரியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கேட்டுக் கொள்கிறது.

ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கொலைக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளி வந்துள்ளது. அரசிடமிருந்தும், காவல்துறையிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக இன்று எங்களுடைய அறிக்கை வெளிவரும் என்பதனையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு,

ஹென்றி திபேன்

நிர்வாக இயக்குநர்

மக்கள் கண்காணிப்பகம்

Full Media Report



Join us for our cause