for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

15.02.2018

பத்திரிக்கை செய்தி

மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 17 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டத்தை மே 17 உட்பட மேலும் சில அமைப்புகள் நடத்திவந்தன. கடந்த வருடம் நடைபெற்ற நிகழ்வின்போது, மே 17 அமைப்பை சேர்ந்த திருமுருகன் காந்தி, அருண்குமார், டைசன், இளமாறன் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. A.K. விஸ்வநாதன்  உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கீழ் இயங்கும் கைதுகள் சர்வதேச நிபுணர் குழுவிடம் 2017 ஜூலை மாதம் புகார் அளித்ததது. இது தொடர்பாக மனித உரிமை காப்பாளர்களுக்கான கூட்டமைப்பு தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அளித்தது. அப்புகார் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு  மாற்றம் செய்யப்பட்டது.

ஐநா நிபுணர் குழு கடந்த நவம்பர் மாதம் நடந்த அதன் எண்பதாவது கூட்டத்தொடரில் திருமுருகன் காந்தியின் கைது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் அளித்த புகாரில் தனது கருத்தினை பதிவு செய்தது. அக்குழுவின் கருத்துகள் அடங்கிய அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், அக்குழு இந்த கைது சம்பவத்தின் புகார் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் கருத்துக்களை கேட்டபோதிலும் அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை

இக்குழு தனது அறிக்கையில் திருமுருகன் காந்தியின் கைது மற்றும் சிறையடைப்பு சர்வதேச மனித உரிமை பிரகடனம் மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையிலுள்ள உரிமைகளை மீறுவதாக கூறியுள்ளது.

மேலும் இவ்வறிக்கையில், மனித உரிமை காப்பாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதினால் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று இக்குழு கூறுகிறது. குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் யாரைவேண்டுமானாலும் விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்க   காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் திருமுருகன் காந்தி மற்றும் மூவரையும் விடுதலை செய்த போதிலும், அவர்கள் நான்கு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்து அவர்களுது உரிமை மற்றும் சுதந்திரங்களை பறிகொடுத்துள்ளனர் என்பதால் இச்சம்பவத்தை பற்றி இக்குழு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் உள்ள அரசாங்கங்களின் கடமைகளை இந்தியா கடைபிடிக்கவேண்டும் என்று இக்குழு கூறியுள்ளது.

மே 17 அன்று சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முதலில் அனுமதி வழங்கிய போலீசார் பின்னர் அதனை ரத்து செய்து, அமைதியாக கூடியிருந்தவர்களை கைது செய்தது, அவர்களுடைய அரசியல் மற்றும் இதர கருத்துக்களால் அவர்கள் பாகுபடுத்தப்பட்டு அதன் காரணமாக கைது செய்யப்பட்டனர் என்று தெரிவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இக்குழு இந்திய அரசிடம், திருமுருகன் காந்திக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதா என்றும்,  இச்சம்பவத்தின் பொது நடைபெற்ற உரிமை மீறல் குறித்து விசாரணை நடைபெற்றதா என்பதை குறித்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் 1250 பேர் குண்டர் தடுப்பு சட்டம் உட்பட மற்ற தடுப்பு காவல் சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இக்குழு கூறியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்த  புகாரினை ஐநா வின் மனித உரிமை காப்பாளர்களுக்குக்கான சிறப்பு பிரதிநிதி, சித்திரவதைக்கான சிறப்பு பிரதிநிதி, கருத்துரிமைக்கான சிறப்பு பிரதிநிதி, அமைதியான வழியில் ஒன்றுகூடும் உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி ஆகியோருக்கு பரிந்துரைத்துள்ளது.

ஐநா நிபுணர் குழுவின் இவ்வறிக்கையை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்கிறது, மேலும் இக்குழுவின் கருத்துப்படி திருமுருகன் காந்திக்கு உரிய நஷ்டஈடும், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும்   நடத்தவேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது. தமிழக அரசு ஐநா வின் மேற்கூறிய நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று தன்னுடைய அரசின் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மனித உரிமை காப்பாளர்களை முறையற்று குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கையை கைவிடக்கோரி வருகின்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

The full text of the UN Working Group on Arbitrary Detention is available at http://www.ohchr.org/Documents/Issues/Detention/Opinions/Session80/A_HRC...

ஹென்றி டிபேன்

நிர்வாக இயக்குநர்

மக்கள் கண்காணிப்பகம்





Join us for our cause