for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூததுக்குடியில் ஒருநபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது.

பதிவு: ஆகஸ்ட் 23,  2021 18:23 PM

 

தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதில் 10 பேர் வாக்குமூலம் அளித்தனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணைய அதிகாரி மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். அதன்படி ஏற்கனவே 28 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 1,153 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 813 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 1,150 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.

29வது கட்ட விசாரணை

தொடர்ந்து ஒரு நபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை, தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் போராட்டத்தின்போது காயமடைந்த போலீசாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போராட்டத்தில் சேதமடைந்த போலீஸ் வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் வக்கீல் ஹென்றி திபேன் உள்ளிட்ட 58 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் 10 பேர் மட்டும் நேற்று ஆஜராக அழைக்கப்பட்டனர். அதன்படி வக்கீல் ஹென்றி திபேன் உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

கால நீட்டிப்பு

இதுகுறித்து வக்கீல் ஹென்றி திபேன் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நபர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி எழுத்துப்பூர்வமாக எனது வாதங்களை முன்வைத்தேன். தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆணையம் முன்பு தற்போது மீண்டும் ஆஜராகி உள்ளேன். 3 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 400 பேரை விசாரிக்க வேண்டி உள்ள நிலையில் ஆணையம் மேலும் ஒரு வருடம் கால நீட்டிப்பு கேட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தமிழக அரசும் கால நீட்டிப்பை வழங்கி உள்ளது. எனவே, விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும்’ என்று கூறினார்

 

Full Media Report



Join us for our cause