for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மதுரையில் குழந்தைகள் மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ரஸ் பவுண்டேசன் அமைப்பின் இயக்குனரும் குழந்தை உரிமைச் செயற்பாட்டாளருமான பெர்லின் ஜோஸ் (54) மற்றும் அவரது அமைப்பு நடத்தி வரும் குழந்தைகள் இல்லத்தின் மேலாளர் ஜான் பிரபாகர் ஆகிய இருவரும் அந்த இல்லத்தில் தங்கியிருந்த குழந்தையை கொடூர பாலியல் தாக்குதல் / வல்லுறவு செய்த குற்றச்சாட்டிற்காக கடந்த 24.10.2019 அன்று பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012ன் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது எமது கவனத்திற்கு தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில் ரஸ் பவுண்டேசன் அமைப்பின் இயக்குனர் பெர்லின் ஜோஸ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது போக்சோ சட்டத்தில் போடப்பட்ட இவ்வழக்கைத் தவிர அவர் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில், உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜாமீன் மனு விசாரணைக்கு மறு தேதி குறிக்கப்பட்ட உடன் வேண்டுமென்றே அவசர அவசரமாக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு புனையப்பட்டுள்ளது. இச்செயல் அவர் பிணையில் வெளியே வருவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே புனையப்பட்ட வழக்காக இருக்கிறது.

.......................................................

மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இது போன்ற கறுப்புச் சட்டங்களை எதிர்த்து வந்திருக்கின்றன. அந்த வகையில் தான் மக்கள் கண்காணிப்பகம் இந்த கொடூரமான குண்டர் தடுப்புச் சட்டத்தை குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் மீது பயன்படுத்துவதை கடுமையாக எதிர்க்கிறது. இதுவரை காலம் காலமாக குழந்தை பாதுகாப்பு பணிகளில் தன்னார்வ அமைப்புகள் தான் அர்பணிப்பு உணர்வோடு பணிகளை ஆற்றியுள்ளார்கள். குழந்தை பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் குற்றமிழைக்கும் போது அவர்கள் மீது முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது மனித உரிமைக்காப்பாளர்களுக்கு எதிரானதாகும். இது தவறான முன்னுதாரணமாகும். இப்போது குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது பாயும் இந்த கறுப்புச் சட்டம் நாளை, பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதும் வேண்டுமென்றே பயன்படுத்தப்படும். மதுரை மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது. குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் மீது திட்டமிட்டு குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்ட செயல் குறித்து தமிழகத்தின் தலைமைச் செயலாளர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லை என்றால், இது போன்ற நடவடிக்கைகள் குழந்தை பாதுகாப்பு பணிகளில் இருந்து தன்னார்வ அமைப்புகளையும் குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்களையும் படிப்படியாக முற்றிலும் அப்புறப்படுத்தும் சனநாயக விரோத செயலையே உருவாக்கும்.

Full Media Report



Join us for our cause